வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெல்ல வேண்டுமானால், அதற்கு விஜய்காந்தின் தயவு நிச்சயம் தேவை. இதனால் ஆட்சியில் பங்கும், துணை முதல்வர் பதவியையும் விஜய்காந்த் கோருவாரேயானால் அதில் நிறைய நியாயம் இருக்கிறது என்று மூத்த பத்திரிக்கையாளர் சோலை
கூறியுள்ளார். நக்கீரனில் அவர் எழுதியுள்ள கட்டுரையில்,
அ.தி.மு.க. அணியில் தே.மு.தி.க. இடம்பெற வேண்டும். அந்தக் கூட்டணி வெற்றிபெற்றால் செல்வி ஜெயலலிதாதான் முதல்வராக வரவேண்டும் என்று பிரபல பத்திரிகையாளர் சோ கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னராவது செல்வி ஜெயலலிதா ஆட்சி பீடம் ஏறவேண்டும் என்பதனை அவர் கடந்த பல ஆண்டுகளாகவே வலியுறுத்தி வருபவர். எனவே தப்பித் தவறி கேப்டன் விஜயகாந்த் முதல்வர் கோரிக்கையை முன்மொழிந்துவிடக்கூடாது என்பதில் அவர் எச்சரிக்கையாக இருக்கிறார். எனவே அ.தி.மு.கவிற்கு கேப்டன் நேசக்கரம் நீட்ட வேண்டும். அத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். அதனைத் தாண்டி அவர் துணை முதல்வர் பதவிக்குக் கூட தூண்டில் போடக்கூடாது என்பதனை சோ தெளிவுபடுத்தியிருக்கிறார்.
அவருடைய கோரிக்கையை நாம் அரசியல்ரீதியாகத்தான் பார்க்கிறோம். ஈழப்பிரச்சினை உட்பட எத்தனையோ பிரச்சனைகளில் ஜெயலலிதாவும் சோ அவர்களும் ஒருமித்தக் கருத்து கொண்டவர்கள். அ.தி.மு.கவைத் தோற்றுவித்த அமரர் எம்.ஜி.ஆரின் கொள்கை, கோட்பாடுகளுக்கு நேர் எதிராகத்தான் இன்றைக்கு அந்தக் கழகம் செயல்படுகிறது. தேர்தல் காலங்களில் மட்டும் அந்தக் கழகத் தலைமைக்கு எம்.ஜி.ஆரின் நினைப்பு வரும்.
பொதுவாக சோ அவர்கள் இந்துத்துவா சிந்தனையுள்ளவர். அடிப்படையில் அவர் பி.ஜே.பி. ஆதரவாளர்தான். அந்தச் சிந்தனையிலிருந்து செல்வி ஜெயலலிதா மாறுபட்டவர் அல்ல. பாபர் மசூதி இடிப்பை பகிரங்கமாக ஆதரித்தவர் செல்வி ஜெயலலிதா. நரேந்திர மோடியின் முடிசூட்டு விழாவிற்குத் தனி விமானத்தில் பறந்து சென்றவர். அதே மோடி, சென்னை வந்தபோது 24 வகை காய்கறிகளு டன் விருந்து வைத்து மகிழ்ந்தவர். எனவே மீண்டும் செல்வி ஜெயலலிதா தமிழக முதல்வராக வரவேண்டும் என்று சோ கொள்கைப் பிரகடனம் செய்ததில் வியப்பில்லை. அகில இந்திய அளவில் பி.ஜே.பி. ஆட்சி, தமிழகத்தில் செல்வி ஜெயலலிதா ஆட்சி என்பதனை சோ தெளிவாகத் தெரிவித்திருக்கிறார்.
ஒரு செய்தியை மட்டும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அமரர் எம்.ஜி.ஆரை மரியாதை நிமித்தம் சந்திக்க விரும்புவதாக பி.ஜே.பி. தலைவர்கள் தூது அனுப்பினர். அப்போது அந்தக் கட்சி யின் தலைவராக இருந்த ஜனா.கிருஷ்ணமூர்த்தி தவமாய் தவமிருந்தார்.
"மரியாதை நிமித்தமாக சந்திக்க விரும்புகின்றனர்? நீங்களும் அனுமதி கொடுத்தால் என்ன" என்று நாம்கூட எம்.ஜி.ஆரை வலியுறுத்தினோம். அதுவே அவருக்கு இதய வலியைக் கொடுத்துவிட்டது. ஆனால், இன்றைக்கு அ.தி.மு.க. என்பது பி.ஜே.பியின் ஒரு கிளைதான். அந்தக் கழகம் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதில் இந்துத்துவா சக்திகள் ஆர்வம் கொள்ளத்தான் செய்யும். அதன் தலைமையே எவ்வளவு ஆசை கொண்டிருக்கிறது என்பதற்கு ஓர் உதாரணம்.
முன்னர் செல்வி ஜெயலலிதா, முதல்வரான போது நள்ளிரவில் கருணாநிதி கைது செய்யப்பட்டார். அதனை நாடே கண்டித்தது. அப்போது மத்தியில் பி.ஜே.பி. ஆட்சி. பிரதமராக வாஜ்பாய் வீற்றிருந்தார். தேசத்தின் மூத்த தலைவர் ஒருவர் நள் ளிரவில் ஒரு கைதியைப்போல் இழுத்துச் சென்றதை தொலைக்காட்சியில் கண்ணுற்ற அவர் மனம் கலங்கிப்போனார். தமிழக அ.தி.மு.க. அரசு டிஸ்மிஸ் செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகின.
அந்தச் சமயத்தில் வாஜ்பாயை நாக்பூரிலிருந்து ஒரு குரல் பகிரங்கமாக எச்சரித்தது. "ஜெயலலிதா அரசைத் தொடாதே' என்று அந்தக் குரல் எச்சரித்தது. அப்படி எச்சரித்தது வேறு யாருமல்ல. இந்துத்துவா சக்திகளின் தலைமைப் பீடமான ஆர்.எஸ்.எஸ்.தான். எனவே மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி வரவேண்டும் என்று இந்துத்துவா சக்திகள் விரும்புவதில் வியப்பில்லை. ஏனெனில் பி.ஜே.பி. அரசுகளுக்கு முன்மாதிரியாக வழிகாட்டி யாக, கட்டாய மதமாற்றச் சட்டம் கொண்டு வந்தவ ரே செல்வி ஜெயலலிதாதான். துணிச்சல் மிக்கவர்.
சட்டமன்றத் தேர்தலில் இரண்டு அணிகள் அமையப் போகின்றன. ஒன்று தி.மு.க. அணி. இன்னொன்று அ.தி.மு.க. அணி. காங்கிரஸ் கட்சியை தமது அணிக்குக் கொண்டுவர அ.தி.மு.க. தலைமை கடும் முயற்சி செய்தது. ஏற்கனவே அந்தக் கழகத்திடம் நிரம்பப் பாடம் கற்றுக்கொண்ட காங்கிரஸ், அதற்கு உடன்படவில்லை.
எனவே இப்போது மீண்டும் வாயிலுக்கு வெளியே காத்திருக்கும் கட்சிகளை அழைத்து அணி காண அ.தி.மு.கழகம் முயற்சிக்கிறது. ஆனால் இன்றுவரை கழகத்துக் கதவை கேப்டனின் தே.மு.தி.க. தட்டிக் கொண்டிருக்கவில்லை. காரணம் அதன் வலிமை. கவுரவமான உடன்பாட்டை அந்தக் கட்சி எதிர்பார்க்கலாம். அப்படி எதிர் பார்ப்பது நியாயமும்கூட.
ஏனெனில் அ.தி.மு.க. அணியில் இடம் பெற வரிசையில் நிற்கும் எந்தக் கட்சிக்கும் 5 சதவிகித வாக்குகள் கூட இல்லை. அந்தக் கட்சிகளுக்கு அடையாளங்கள் உண்டு. அவ்வளவுதான். சுருங்கச் சொன்னால் பெருங்காயம் இருந்த பாத்திரங்கள்.
கேப்டனின் தே.மு.தி.கவுக்கு மட்டும் தான் தமிழகம் தழுவிய அளவில் எல்லா தொகுதிகளிலும் பத்து சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகள் உண்டு. எனவே அதற்குரிய மரியாதையை கேப்டன் எதிர்பார்ப்பதில் தவறில்லை. அந்த மரியாதை எப்படி இருக்க வேண்டும் என்பதனையும் அவர் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகிறார்.
"தன்மானத்தை இழந்து கூட்டணி கொள்ளமாட்டோம். ஒரு தேர்தல் வெற்றிக்காகத் தொண்டர்களை அடகு வைக்கமாட்டேன்' என்று அவர் முரசறைந்து வருகிறார். எனவே அ.தி.மு.க. அணிக்கு தே.மு.தி.க. வரவேண்டும் என்று விரும்புகிறவர்கள் என்ன செய்ய வேண்டும்?. குறைந்தபட்சம் தேர்தலுக்கு முன்னரும் தேர்தலுக்குப் பின்னரும் கேப்டனின் மரியாதைக்குப் பங்கம் வந்து விடாது பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கான உத்தரவாதத்தை அ.தி.மு.க. தலைமையிடம் அவர்கள் பெற வேண்டும். ஏனெனில் சுயமரியாதையை இழந்து கூட்டணி கொள்ள மாட்டோம் என்பதனை கேப்டன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
அ.தி.மு.கவோடு உடன்பாடு கண்ட சோனியா காந்தி எத்தகைய கொடுமையான விமர்சனங்களுக்கு ஆளானார் என்பதனை எவரும் மறந்திருக்கமாட்டார்கள்.
இரண்டு கம்யூனிஸ்ட் கட்சி களையும் அணி சேர்த்துக்கொண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. ஆனால் அடுத்த சில மாதங்களிலேயே அந்தக் கட்சிகள் பட்ட அவமானங்களுக்கு அளவேயில்லை. தகரம் கண்டுபிடிப்பதற்கு முன்னரே கம்யூனிஸ்ட்டுகள் உண்டியலைக் கண்டுபிடித்தவர்கள் என்று சட்ட மன்றத்திலேயே செல்வி ஜெயலலிதா ஒரு பொன்மொழியைப் பதிவு செய்தார்.
அ.தி.மு.க. அணியில் சேர்ந்தால் என்ன கதியாகும் என்பதற்கு ம.தி.மு.கவே ஓர் உதாரணமாகும். பம்பரம் ஓய்ந்துவிட்டது. கடைசி வரை போயஸ் தோட்டத்து வாசலில் பள்ளிகொண்டிருப்பதைத் தவிர அதற்கு வேறு வழி இல்லை. அந்தக் கட்சித் தலை வரை வேலூர் சிறைக்கு விருந்தாளியாக அனுப்பியது யார் என்பதும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
ஒருமுறை நாடாளுமன்றத் தேர்தலின்போது மதுரையில் செல்வி ஜெயலலிதா பேசுகிறார். ம.தி.மு.க. தலைவர் மேடையில் அல்ல, மேடைக்கு எதிரே ஆடியன்ஸோடு ஆடியன்ஸாக, மக்களோடு மக்களாக உட்கார வைக்கப் பட்டார். அந்தக் கதி கேப்டன் அவர்களுக்கு ஏற்படாது என்று சோ போன்றவர்கள் அ.தி.மு.க. தலைமையைக் கேட்டுச் சொல்ல வேண்டும். தெரியாத்தனமாக அ.தி.மு.க. அணிக்குப் போய் குறுகிய காலத்தில் நிறைய பாடங்கள் படித்து தப்பித்து வந்தது விடுதலைச் சிறுத்தைகள் தான். அதனால்தான் இந்த ஆண்டு எங்கள் ஆண்டு என்று அவர்கள் தலை நிமிர்ந்து சொல்கிறார்கள்.
செல்வி ஜெயலலிதாவும் கேப்டன் சாரும் கூட்டாகத் தமிழகம் முழுமையும் ஒரே மேடையில் நின்று பிரச்சாரம் செய்தால் ஓரளவு பலனை எதிர்பார்க்கலாம்.
ஆனால் அதிலும் ஒரு ஆபத்து இருக்கிறது. 2001ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு சோனியா வந்தார். விழுப்புரத்தில் அவரும் ஜெயலலிதாவும் பேச ஏற்பாடு. சோனியா இரண்டு மணி நேரம் காத்திருந்தார். ஜெயலலிதா வரவேயில்லை.
இன்றைக்கு அ.தி.மு.கவின் பாரம்பரியம் என்ன? வலிய உறவாடி வாசலுக்குப் போனாலும் "வா" என்று பொய்யாக உறவாடித் தேர்தல் முடிந்ததும் "போய் வா" என்று அனுப்புகின்ற பண்பில் தான் ஊறித் திளைத்திருக்கிறது.
இனி நிதர்சன நிலையைப் பார்ப்போம். தி.மு.க.- காங்கிரஸ்- விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி என்பது வலிமையான அணி. அந்தக் கூட்டணிக்கு பா.ம.க. தாவினால் வட மாவட்டங்களில் 2 சதவிகித வாக்குகள் கூடுதலாகக் கிடைக்கும். அ.தி.மு.க. அணிக்கு அந்தக் கட்சி தாவினாலும் தி.மு.க. அணிக்கு நட்டமில்லை.
தி.மு.க. கூட்டணிக்குக் கண்களுக்குத் தெரியாத மிகப்பெரும் வலிமை இருக்கிறது. அந்த வலிமைதான் மக்கள் செல்வாக்கு. கடந்த ஐந்து ஆண்டுகளில் கருணாநிதி அரசு செய்த மக்கள் நலப்பணிகள் அரசியல், கட்சி எல்லைகளை உடைத்துக் கொண்டு அந்த மகத்தான செல்வாக்கை தி.மு.கவுக்கு தேடித் தந்திருக்கிறது.
தமிழக அரசு செயல்படுத்தியதில் 10 சதவீதப் பணிகளைத்தான் பீகாரில் நிதிஷ்குமார் அரசு செயல்படுத்தியது. அவருடைய கூட்டணியே மகத்தான வெற்றி பெற்றபோது தமிழகத்தில் தி.மு.க. அணி எத்தகைய வெற்றி பெறும் என்று சொல்லத் தேவையில்லை.
அமரர் எம்.ஜி.ஆர். காலத்தில் அ.தி.மு.கவின் வாக்கு வங்கி 30 சதவீதம். தி.மு.கவின் வாக்கு வங்கி 30 சதவீதம். கூட்டணியின் பலத்தைப் பொறுத்து தேர்தல் தீர்ப்புகள் தீர்மானிக்கப்பட்டன.
இன்றைக்கும் தி.மு.கவின் வாக்கு வங்கி 30 சதவீதம். காங்கிரஸ் 10 சதவீதம். விடுதலைச் சிறுத்தைகள் 5 சதவீதம். இதனோடு மக்கள் செல்வாக்கிற்கும் சிறுபான்மை மக்களின் மாறாத ஆதரவிற்கும் எத்தனை சதவீதம் என்று கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் கணக்கின்படி அ.தி.மு.கவின் வாக்கு வங்கி 23 சதவிகிதம். இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் 3 சதவிகிதம். ம.தி.மு.கவிற்கு ஒரு சதவிகிதம்.
சென்ற ஆண்டு சட்டமன்றத்திற்கு இடைத்தேர்தல்கள் நடந்தன. திருமங்கலம் தொகுதியில் போட்டியிட வேண்டிய ம.தி.மு.க. ஜகா வாங்கியது. பர்கூர் தொகுதியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1,500 வாக்குகளும், கம்பம் தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கட்சி 2,500 ஓட்டுக்களும்தான் வாங்கின.
இந்தக் கட்சிகள் அனைத்தின் வாக்கு வங்கியைக் கூட்டினாலும் 30 சதவீதத்தை எட்டவில்லை. எனவே அ.தி.மு.க. அணி கவுரவமான இடங்களைப் பெற வேண்டுமென்றால் அதற்கு கேப்டனின் தே.மு.தி.க.வின் தயவு தேவை. இன்றைக்கு கேப்டனின் தொண்டர்கள் தன்னலமற்ற ஊழியர்கள். அவர்களுக்கு ஈடாக களப்பணி செய்ய வேறு எந்தக் கட்சியிலும் தொண்டர்கள் இல்லை.
தி.மு.க. ஆட்சி அமைத்தால் அதில் தாங்கள் அங்கம் பெறவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்துகின்றனர். காங்கிரஸ் கட்சிக்கு ஈடாக வலிமை கொண்ட தே.மு.தி.க. அதேபோல் ஆட்சியில் பங்கு, துணை முதல்வர் பதவி என்று கோருமானால் அதில் நிரம்ப நியாயம் இருக்கிறது.
வெறும் 50 சீட்டுகளுக்காக அ.தி.மு.க. அணியில் தே.மு.தி.க. இடம்பெறுமானால் அந்தக் கட்சி தனது எதிர்காலத்தை ம.தி.மு.கவைப் போல் இழந்துவிடும். சுயமரியாதையையோ, தன்மானத்தையோ விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று இதுவரை கேப்டன் சார் சொல்லி வந்தது தேர்தல்கால வெற்று முழக்கம் என்று ஆகிவிடும்.
குறுகிய காலத்தில் தே.மு.தி.க. அபரிமிதமான மக்கள் செல்வாக்கைப் பெற்ற அரசியல் இயக்கம். இன்னும் அதற்கு எதிர்காலம் உண்டு. எனவே எடுத்து வைக்கின்ற அடி அழுத்தமாக இருக்கவேண்டும். எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தேர்தலுக்கு முன்னரும், பின்னரும் அதன் சுயமரியாதை- தன்மானம் காக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் சோலை.
--
Resolve to make at least one person happy every day, and then in ten years you may have made three thousand, six hundred and fifty persons happy, or brightened a small town by your contribution to the fund of general enjoyment.
