நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள லஞ்சத்தை ஒழிக்க, அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விப்ரோ நிறுவனத்தின் மூன்றாவது காலாண்டு முடிவுகளை வெளியிட்ட அசிம் பிரேம்ஜி நிருபர்களிடம் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:நாட்டில், இப்போதுள்ள முக்கிய பிரச்னை லஞ்சம். இது வரை இருந்தது போதும்; இனி லஞ்சமே கூடாது என்ற அளவுக்கு, இதை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.நாட்டின் பெருமைக்கும், வளர்ச்சிக்கும் தடையாக இருக்கும் லஞ்சத்தை அனைத்து நிலைகளில் இருந்து முற்றிலும் நீக்க வேண்டும்.
இது குறித்து தேசிய தலைவர்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.ஊழலுக்கு முடிவு கட்ட வலியுறுத்தி, பல்வேறு பன்னாட்டு நிறுவன தலைவர்கள், வங்கிகளின் தலைவர்கள், முன்னாள் நீதிபதிகள் ஆகியோர் ஒன்றிணைந்து கையெழுத்திட்ட கடிதம் அரசுக்கும், தேசிய தலைவர்களுக்கும் அனுப்பியுள்ளோம்.இக்கடிதத்தில், இது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த, ஆலோசனைகள் அடங்கிய செயல் திட்டம் ஒன்றையும் தெரிவித்துள்ளோம். நாங்கள் தெரிவித்துள்ள ஐந்து பரிந்துரையில் சுதந்திரமான விசாரணை அமைப்பு, சட்ட அமலாக்க பிரிவு அமைப்பது பற்றியும் குறிப்பிட்டுள்ளோம்.
The Story of India Agriculture, Sector in Tamil
அரசின் வளர்ச்சி திட்டங்கள் ஏழைகளை சென்றடையவில்லை. ஒவ்வொரு இந்தியனுக்கும் சமமான வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அப்போது ஒன்றுபட்ட வளர்ச்சியை எட்ட முடியும்.
நாங்கள் அனுப்பிய கடிதத்தை வரவேற்று, சில தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்களின் பெயர்களை வெளியிட விரும்பவில்லை.இவ்வாறு அசிம் பிரேம்ஜி கூறினார்.லஞ்சத்தை ஒழிக்கும்படி கூறி எழுதப்பட்ட கடிதத்தில் அசிம் பிரேம்ஜியுடன், எச்.டி.எப்.சி., சேர்மன் தீபக் பரேக், சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் பீமல் ஜலான் ஆகியோர் கையெழுத்திட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது